சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதை எதிர்க்கும் மனுக்கள் தள்ளுபடி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட 5 மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து விட்டது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு ஏப்ரல் 25ஆம் தேதி மறுதேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் சார்பில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களில், 'பொருளியல் பாடத்துக்கான மறுதேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்ய வேண்டும்; இந்த விவகாரம் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது ஆகும். எனவே, வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் குறித்து தில்லி போலீஸாரால் மட்டும் விசாரணை நடத்த முடியாது. சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ரோஹன் மாத்யூஸ் என்ற மாணவர் தொடுத்திருந்த மனுவில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில் முடிவுகளை வெளியிடும்படி சிபிஎஸ்இ அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதை எதிர்க்கும் மனுக்கள் தள்ளுபடி

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மறுதேர்வு தொடர்பான முடிவை எடுக்கும் சுதந்திரம், சிபிஎஸ்இ அமைப்புக்கு உள்ளது. இதை எதிர்த்து, நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது.
சிபிஎஸ்இ அமைப்பால் மறுதேர்வு நடத்தப்படும் பட்சத்தில், அதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். எனவே, சிபிஎஸ்இ மறுதேர்வு முடிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட 5 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ அமைப்பால் நடத்தப்பட்ட 12, 10ஆம் வகுப்புக்கான தேர்வுகளில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. 
இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ அமைப்பானது 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான மறுதேர்வு, நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று கடந்த 30ஆம் தேதி அறிவித்தது. 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு, தில்லி, ஹரியாணாவில் மட்டும் மறுதேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Share this:

Disqus Comments