நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம்

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான இலவச சிறப்பு வகுப்புகள் வியாழக்கிழமை (ஏப்.5) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.
மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக இலவசப் பயிற்சி மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு தொடங்கியது. 
தொடக்கத்தில் 100 மையங்களில் 20,000 மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சி, பிப்ரவரி மாத இறுதியில் 70,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 மையங்களில் இந்த மையங்கள் செயல்பட்டுவந்தன. 
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியதால் பிப்ரவரி 3-ஆவது வாரம் முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 
பிளஸ் 2 வகுப்பில் கணிதமும், அறிவியலும் இணைந்த பாடப்பிரிவு மாணவர்களுக்கு திங்கள்கிழமையுடன் (ஏப்.2) பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதையடுத்து 412 பயிற்சி மையங்களிலும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. 
நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: நாளை முதல் மீண்டும் தொடக்கம்

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஸ்பீடு அகாதெமி நிர்வாகிகள் ஆகியோர் கூறியது:- 
நாடு முழுவதும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டுமே இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு 8,233 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு 412 மையங்களிலும் ஏப்.5 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும். ஏப்.20-ஆம் தேதிக்குப் பிறகு, தேர்வு மூலம் 2,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் விடுதியுடன் கூடிய இலவசப் பயிற்சி 15 நாள்கள் வழங்கப்படும்.
பிளஸ் 1 மாணவர்களுக்கும் வாய்ப்பு: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். அதேபோன்று அரசுப் பள்ளிகளைச்சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் ஏப்.9- ஆம் தேதி பொதுத்தேர்வு முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றனர்.

Share this:

Disqus Comments