விஐடி நுழைவுத்தேர்வு தொடக்கம்

அயல்நாடுகள் உள்பட 175 மையங்களில் விஐடி நுழைவுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. வேலூர் விஐடி வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பார்வையிட்டார். 
வேலூர் விஐடி வளாகத்தில் இந்தாண்டு பிடெக் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேடிக்ஸ், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட 18 வகையான படிப்புகளுக்கும், விஐடி சென்னை வளாகத்தில் பிடெக் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கும், விஐடி போபால் வளாகத்தில் பிடெக் எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி என்ஜினியரிங் படிப்புகளுக்கும், விஐடி அமராவதி (ஆந்திரம்) வளாகத்தில் பிடெக் கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய படிப்புகளிலும் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு புதன்கிழமை (ஏப்.4) தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விஐடி நுழைவுத்தேர்வு தொடக்கம்

இதையொட்டி, துபை, குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய அயல்நாடுகளிள், இந்தியாவில் 120 நகரங்கள் என மொத்தம் 175 மையங்கள் அமைக்கப்பட்டு கணினி முறையில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. காலை 9 முதல் 11.30 மணி வரையும், மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் என மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க 2 லட்சத்து 12 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பித்தனர். இதில், அதிகபட்சமாக ஆந்திராவில் 33,319 மாணவர்களும், தமிழகத்திலிருந்து 16,824 மாணவர்களும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாத இறுதியில் www.vit.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், வேலூர் விஐடி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுழைவுத் தேர்வை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக் கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பிடெக் படிக்கும் 4 ஆண்டு காலம் முழுவதும் நூறு சதவீதம் கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. தவிர, விஐடி நுழைவுத் தேர்வில் ஒன்று முதல் 50 இடங்களுக்கு உள்ளாக தகுதிபெறும் மாணவர்களுக்கு 75 சதவீத படிப்புக்கட்டணச் சலுகையும், 51 முதல் நூறு இடங்கள் பெறுபவர்களுககு 50 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும், 101 முதல் 1000 இடங்கள் பெறுபவர்களுக்கு 25 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும் 4 ஆண்டுகாலம் முழுவதும் வழங்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள கிராமப்புற ஏழை குடும்ப மாணவ, மாணவிகளும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு நூறு சதவீத படிப்புக் கட்டணச் சலுகையுடன் உணவு, தங்குமிட வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது என்றார் அவர்.
அப்போது, துணைவேந்தர் நாராயணன், பிடெக் மாணவர் சேர்க்கை இயக்குநர் கே.மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share this:

Disqus Comments