சிபிஎஸ்இ தேர்வுகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் தேர்வுகளை ஆய்வு செய்வதற்காக உயர் அதிகாரக் குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அந்தக் குழுவுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள் செயலர் வி.எஸ்.ஓபராய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு உள்பட எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வண்ணம் எவ்வாறு தேர்வுகளை சிறப்பாக நடத்தலாம் என்பது தொடர்பான பரிந்துரைகளை அக்குழு அளிக்கும். இதுதொடர்பான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மே 31-ஆம் தேதி வரை உயர் அதிகாரக் குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 12-ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய சர்ச்சைகள் எழுந்தன.
சிபிஎஸ்இ தேர்வுகள்: ஆய்வு செய்ய குழு அமைப்பு

முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்தது. இதையடுத்து அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டபோது பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பொருளியல் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் தேர்வுகளை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் உயர் அதிகாரக் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மனிதவள மேம்பாட்டுத் துறை முன்னாள் செயலர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியோடு, தேர்வில் முறைகேடுகள் நிகழாமல் தடுப்பது தொடர்பாக அக்குழு ஆலோசனைகளை வழங்க உள்ளது.

Share this:

Disqus Comments