adsby

முதல் முறையாக பிளஸ் 1-க்கு நாளை பொதுத் தேர்வு: 8.63 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கு முதல் முறையாக பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 7) தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை 8.63 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். 

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாத தொடக்கத்திலேயே தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழகம், புதுச்சேரியில் 2,795 மையங்களில் புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 7,070 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61,915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63,668 பேர் எழுதுகின்றனர். 

மேலும் படிக்க : தனித்தேர்வர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

தேர்வெழுதவுள்ளவர்களில் 4,60,406 பேர் மாணவியர். 4,01,509 பேர் மாணவர்கள். 58,897 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாநகரில் 407 பள்ளிகளிலிருந்து 156 தேர்வு மையங்களில் மொத்தம் 49,422 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 38 தேர்வு மையங்களில் மொத்தம் 15,404 மாணவ, மாணவிகளும் பிளஸ் 1 தேர்வில் பங்கேற்கின்றனர். 
முதல் முறையாக பிளஸ் 1-க்கு நாளை பொதுத் தேர்வு: 8.63 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


சிறையில் 62 பேர்... வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதுகின்றனர். 
இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14, 498 ஆகும். மொத்தம் 43,190 ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுத் தேர்வையொட்டி 296 கட்டுக் காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 4,000 எண்ணிக்கையிலான பறக்கும் படை, நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க : பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் முறைகேட்டில் ஈடுபட்ட 8 மாணவர்கள் பிடிபட்டனர் 

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்வு மையத்துக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்லிடப்பேசி எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது தேர்வுத்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையம், பள்ளி அங்கீகாரம் ஆகியவை ரத்து செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1 தேர்வு முடிவு எப்போது?: பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : நீட் தேர்வுக்கு விண்ணப்பம் 

0 comments:

கருத்துரையிடுக